LOADING...
பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நியமிக்கப்பட வாய்ப்பு: பரபரப்புத் தகவல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு

பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நியமிக்கப்பட வாய்ப்பு: பரபரப்புத் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
08:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் மற்றொரு தலைமை மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த முறை, ஒரு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி மற்றும் ரோஜர் பின்னிக்குப் பிறகு, ஒரு கிரிக்கெட் வீரரே மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்பது தொடர வாய்ப்புள்ளது. பிசிசிஐயின் விதிமுறைகளின்படி, 70 வயதை எட்டியதால், தலைவர் பதவியிலிருந்து விலகிய ரோஜர் பின்னிக்குப் பதிலாக, தற்போது துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். டைனிக் ஜாக்ரன் வெளியிட்ட செய்தியின்படி, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-சச்சின் டெண்டுல்கர் கோப்பைத் தொடரின்போது, அந்த ஜாம்பவானுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

தீவிரம்

கிரிக்கெட் வீரரைக் கொண்டுவர தீவிரம் காட்டுவதாக தகவல்

ஒரு மூத்த அரசியல் தலைவர், இந்தப் பதவி குறித்து விவாதிப்பதற்காக அவரைச் சந்தித்துள்ளார். அந்த ஜாம்பவானின் பதில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த நகர்வு ஒரு முக்கிய கிரிக்கெட் வீரரை நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டு வர ஆளுங்கட்சி தீவிரமாக உள்ளதைக் காட்டுகிறது. விளையாட்டுத் துறையில் விளையாட்டு வீரர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இது உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நியமிக்கப்பட்டதும் இந்த மாற்றம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, செப்டம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் தலைவர், செயலாளர் மற்றும் ஐபிஎல் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.