குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தோனேசிய வீரர் அல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 'குமமோட்டோ மாஸ்டர்ஸ் 2026' (Kumamoto Masters Japan) சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் இந்தோனேசியாவின் உலகின் 10-ம் நிலை வீரர் அல்வி ஃபர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் (Hylo Open) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற உற்சாகத்துடன் களம் கண்ட லக்சயா சென், சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 21-12, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிடபிள்யூஎஃப் உலக டூர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
சாதனை
முதல் முறையாக அல்வி ஃபர்ஹானை வீழ்த்தி சாதனை
இதற்கு முன்பு அல்வி ஃபர்ஹானுக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த 8-ம் நிலை வீரரான லக்சயா சென், இந்த முறை தனது ஆட்ட உத்தியை முற்றிலும் மாற்றியமைத்துத் தக்க பதிலடி கொடுத்தார்.
முதல் செட்டில் நெட் அருகே துல்லியமாகச் செயல்பட்டு ஃபர்ஹானின் வேகத்தைக் கட்டுப்படுத்திய லக்சயா, 21-12 என எளிதில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ஃபர்ஹான் ஆக்ரோஷமாக மீண்டு வந்து 21-15 என வென்று போட்டியைச் சமன் செய்தார்.
இருப்பினும், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் பதற்றமின்றிச் செயல்பட்ட லக்சயா, ஃபர்ஹானின் பேக்ஹேண்ட் திசையைக் குறிவைத்து அனல் பறக்கும் ஸ்மாஷ்களை விளாசி 21-11 என்ற கணக்கில் ஆட்டத்தைத் தன்வசப்படுத்தினார்.
இறுதிப்போட்டி
உலக டூர் ஃபைனல்ஸ் கனவு
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி ஹைலோ ஓபன் பட்டத்தை வென்ற லக்சயா சென், தற்போதைய தொடரிலும் சீன தைபே, சீனா மற்றும் ஜப்பான் வீரர்களை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி 'பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனல்ஸ்' தொடருக்குத் தகுதி பெற முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்ற நிலையில், 12-வது இடத்தில் உள்ள லக்சயாவுக்கு இந்த வெற்றி முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது.
நாளை (நவ. 15) நடைபெறும் இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் குன்லவுட் விதித்சர்ன் அல்லது ஜப்பானின் கோகி வதனபேவை அவர் எதிர்கொள்கிறார்.