'பும்ரா இல்லனா தோல்வி நிச்சயம்' : முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வார்னிங்
ஆகஸ்ட் 2023 இறுதியில் அயர்லாந்தில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதால், அனைவரின் பார்வையும் அவர் மீது குவிந்துள்ளது. தனது முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த பும்ரா, இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பெறும் முதல் தொடர் இதுவாகும். இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் பும்ராவின் செயல்திறனையும், அவர் எவ்வளவு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளும் தொடராக இது இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். அதே சமயம், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு பும்ராவின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பேசியதன் முழு விபரம்
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை என்றால், நிச்சயம் கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையின் நாக் அவுட் கட்டங்களை போன்றே போராடும் என கைஃப் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவிடம் தற்போது இரண்டு-மூன்று அணிகள் கூட உள்ளன. ஆனால் அது பந்துவீச்சில் எடுபடாது. பந்துவீச்சைப் பொறுத்தவரை ஒரே அணிதான். பும்ரா விளையாடவில்லை என்றால் ஆசியக் கோப்பை டி20 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததைப் போல நாம் ஒருநாள் உலகக்கோப்பையிலும் தோல்வியடைவோம்." எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா காலிறுதியை எளிதாக கடந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கைஃப், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில்தான் போராட வேண்டியிருக்கும் எனக் கூறினார்.