ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஜோஸ் பட்லரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் பட்லரின் எந்தச் செயலுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் ரன் அவுட் செய்யப்பட்டதற்கு எதிர்வினையாற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி ஹைலைட்ஸ்
போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 0 ரன்களில் டக் அவுட் ஆன நிலையிலும், ஜெய்ஸ்வால் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 48 ரன்களும் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.