ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுஷாக்னே ஆறு மாதங்களுக்கும் மேலாக முதலிடத்தில் நீடித்திருந்த நிலையில், தற்போது ஜோ ரூட்டிடம் நம்பர் 1 இடத்தை இழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தார்.
எனினும் இந்த ஸ்கோர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. அந்த அணி இறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
heavy competition for 1st spot
முதலிடத்திற்கு கடும் போட்டி
ஜோ ரூட் தற்போது ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றி இருந்தாலும், அவருக்கும் 6வது இடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் வெறும் 26 மட்டுமேயாகும்.
முதல் 7 இடங்களில் ஒரு இங்கிலாந்து வீரரும், 4 ஆஸ்திரேலிய வீரர்களும் இருப்பதால், ஆஷஸ் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவில் நம்பர் 1 இடம் கைமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை, இந்திய வீரர்களில் தற்போது ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 10வது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடாத அஸ்வின் ரவிச்சந்திரன், பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார்.
இதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தில் நீடிக்கிறார்.