ஆஷஸ் 2023 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்
ஓவலில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இங்கிலாந்து அணிக்காக முக்கியமான கட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறந்தபிகிய ஜோ ரூட் 106 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்களை எட்ட உதவினார். இதன் மூலம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சாக் க்ராலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். மேலும், நடப்பு ஆஷஸ் தொடரில் ஐந்து போட்டிகளில், ஜோ ரூட் மொத்தம் 412 ரன்கள் குவித்துள்ளார்.
19வது முறையாக 300 ரன்களை கடந்த ஜோ ரூட்
நடப்பு ஆஷஸ் தொடரில் 412 ரன்களை குவித்துள்ளதன் மூலம், ஜோ ரூட் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 300 ரன்களை கடந்தது இது 19வது முறையாகும். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே டெஸ்ட் தொடர்களில் 19 முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராக இருந்த நிலையில், தற்போது ஜோ ரூட் அதை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 18 முறை 300 ரன்களை கடந்து ராகுல் டிராவிட் மற்றும் பிரையன் லாரா இரண்டாவது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலஸ்டர் குக் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 17 முறை இந்த சாதனையை நிகழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர்.