ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கான புதிய இடமாக ஜோத்பூரின் பர்கத்துல்லா கான் ஸ்டேடியம் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் (ஆர்சிஏ) உயர் அதிகாரிகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) சில ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸின் தாயகமாகும். மேலும் வரவிருக்கும் சீசன் மீண்டும் சொந்த மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படுவதால், ஆர்சிஏ புதிய மைதானத்தில் சில விளையாட்டுகளை நடத்த விரும்புகிறது. எனினும், மைதானத்தை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே ஜோத்பூரில் போட்டிகளை நடத்தலாமா வேண்டாமா என்று பிசிசிஐ முடிவுசெய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஜோத்பூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியமா?
ஐபிஎல் போட்டியை நடத்த, ஒவ்வொரு மைதானத்திலும் சில அடிப்படை வசதிகளை மாநில கிரிக்கெட் சங்கம் செய்ய வேண்டும். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில் இந்த மைதானத்தில் ரஞ்சி டிராபி போட்டி சத்தீஸ்கர் மற்றும் சர்வீசஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்த மைதானம் 30,000 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது மற்றும் கடந்த ஆண்டு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்கான இடமாக இது இருந்தது. லெஜண்ட்ஸ் லீக் போட்டிகள் விளக்குகளின் கீழ் விளையாடப்பட்டது. இதனால் பிசிசிஐ நடத்தும் போட்டிகளை இங்கு விளையாட முடியும் என்று ஆர்சிஏ நம்புகிறது. இருப்பினும், ஜோத்பூர் மைதானத்தை பொறுத்தவரை பிசிசிஐயின் முக்கிய கவலை பவுண்டரி அளவு ஆகும். இது தேவையான தூரத்திற்கு அமைக்கப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் நினைக்கிறார்கள்.