டிசம்பர் 2024க்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு; மகளிர் கிரிக்கெட்டில் அனாபெல் சதர்லேண்ட் தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பார்டர் கவாஸ்கர் டிராபியில் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, டிசம்பர் 2024க்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்த போதிலும், பும்ராவின் விதிவிலக்கான பந்துவீச்சு அவருக்கு இந்த மதிப்புமிக்க பாராட்டைப் பெற்றுத் தந்தது.
ஒரே வருடத்தில் அவர் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையில் அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேன் பேட்டர்சன் ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களை விஞ்சி பும்ரா விருதை வென்றுள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா
ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன்
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கட் தொடரில் அவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 13.06 சராசரி மற்றும் 2.76 பொருளாதாரத்தில் 32 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த சாதனை மூலம், 2000/01ல் ஹர்பஜன் சிங்கின் 32 விக்கெட்டுகளை சமன் செய்ததோடு, இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராகவும் ஆனார்.
இந்தத் தொடரில் அவர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் அனாபெல் சதர்லேண்ட் இரண்டு சதங்கள் மற்றும் 269 ரன்களுடன் டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் தென்னாப்பிரிக்காவின் நோன்குலுலேகோ மலாபாவை வீழ்த்தி விருதைக் கைப்பற்றினார்.