ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா
மும்பை வான்கடேயில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். இதைத் தொடர்ந்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பும்ரா வீசிய முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்கவை இழந்தது.
ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்கவை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை ஜஸ்ப்ரீத் பும்ரா செய்தார். இதற்கிடையே, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் அபாரமான ஃபார்மில் உள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும், இந்த தொடரில் முதல் பவர்பிளேயில் (0-10 ஓவர்கள்) மட்டும் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் 390 பந்துகளில் 304 டாட் பால்களை வீசியுள்ளார். இந்த போட்டியை பொறுத்தவரை இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டு இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது.