லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஜேசன் ராய் முடிவு!
அமெரிக்காவின் வரவிருக்கும் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள தொடக்க மேஜர் கிரிக்கெட் லீக் சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து வருகிறார். மேஜர் கிரிக்கெட் லீக் ஜூலை 13 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிகள் அதே சமயத்தில் இருப்பதால், மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. எனினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் கிடைக்கும் தொகையை விட அதிக தொகையை தர மேஜர் கிரிக்கெட் லீக் அணிகள் தயாராக உள்ளது.
மேலும் சில வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்
மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட ஜேசன் ராய்க்கு 3,00,000 யூரோவை இரண்டு வருடங்களுக்கு தர தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் ஆண்டிற்கு 66,000 யூரோ மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து டி20 அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக ஜேசன் ராய் இல்லாததால், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடலாம் என முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், அடுத்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்படலாம் எனக் கூரப்பப்டுகிறது. இதற்கிடையே ஜேசன் ராய் மட்டுமல்லாது, அவரது சக வீரரான ரீஸ் டோப்லியும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.