வெறும் 7 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் அவுட்; சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அணி
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) லாகோஸில் நடந்த டி20 உலகக்கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக ஐவரி கோஸ்ட் வெறும் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தது. இந்த மோசமான ஸ்கோர், ஐல் ஆஃப் மேன் மற்றும் மங்கோலியாவின் முந்தைய 10 ரன்களின் சாதனையை முறியடித்து, இதுவரை இல்லாத குறைந்த சர்வதேச டி20 கிரிக்கெட் ஸ்கோருக்கான புதிய சாதனையை படைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. செலிம் சலாவின் 53 பந்துகளில் 112 ரன்களும், ஐசக் ஓக்பே 23 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் விளாசினர்.
ஐவரி கோஸ்ட் பேட்டிங்
272 ரன்கள் எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐவரி கோஸ்டின் இன்னிங்ஸ் ஒரு வியத்தகு சரிவை ஏற்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் அவுட்டாரா மொஹமட் அதிகபட்சமாக நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிர்ச்சியூட்டும் வகையில், அவர்களின் ஆறு பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாக வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கத் தவறியது. அவர்களின் இன்னிங்ஸ் வெறும் 7.3 ஓவர்களில் 7 ரன்களுடன் முடிவடைந்தது. லட்ஜி எசெச்சில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம், நைஜீரியா 264 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் 2026 டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டமாக விளையாடப்பட்டு வருகிறது.