இரானி கோப்பை 2023 : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்துமா மத்திய பிரதேசம்?
2021-22 ரஞ்சி டிராபியின் சாம்பியன் மத்தியப் பிரதேசம் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கும் 2023 இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. முழு ஃபார்மில் உள்ள மயங்க் அகர்வால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பை பெற, இந்த போட்டி அவருக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. சர்ஃபராஸ் கான் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த பாபா இந்திரஜித் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மத்திய பிரதேசம் ரஜத் படிதார் மற்றும் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இரானி கோப்பை போட்டி
இரானி கோப்பை என்பது ரஞ்சி கோப்பையை வென்ற அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே விளையாடப்படுகிறது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் பல்வேறு மாநிலங்களின் ரஞ்சி அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 2022-23ல் முதல் ரஞ்சி பட்டத்தை வென்ற மத்தியப் பிரதேசம், இப்போது முதல் முறையாக இரானி கோப்பையில் விளையாடுகிறது. குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியம் போட்டியை நடத்துகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குவாலியரில் நடைபெறும் முதல் முதல் தரப் போட்டி இரானி கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேச அணியின் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஹிமான்ஷு மந்திரி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.