பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி?
வரவிருக்கும் 2025 ஐபிஎல் ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை 'அன்கேப்ட் பிளேயர்' என்று வகைப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருகிறது. இந்த முடிவு முந்தைய ஐபிஎல் விதிமுறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். இந்த நடவடிக்கையானது ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியுடன் இணைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு பெரிதும் பயனளிக்கும். பிசிசிஐயின் இந்த விதியானது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற வீரர்களை, அன்கேப்ட் பிரிவில் சேர்த்தது. இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டால், முந்தைய தக்கவைப்பு விதிகளின்படி தோனியைத் தக்கவைத்துக்கொள்வது சிஎஸ்கேவுக்கு மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும். ஒரு அன்கேப்ட் வீரரை ₹4 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் வகைப்படுத்தலில் சிஎஸ்கேயின் நிலைப்பாடு
2025 ஐபிஎல் ஏலத்தில் எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராகக் கருதப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்றும், அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் கோரவில்லை என்றும் கூறினார். மேலும், அன்கேப்ட் பிளேயர் விதியை தக்கவைப்பது குறித்து பிசிசிஐ தங்களுக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய தோனி, ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல்லில் தனது எதிர்காலம் வரவிருக்கும் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளைப் பொறுத்தது என்று அவர் சமீபத்தில் மறைமுகமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.