இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் நாளையும் (நவம்பர் 24 மற்றும் 25) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஸ் பட்லர் போன்ற நட்சத்திரங்கள் உட்பட மொத்தம் 577 வீரர்கள், 10 அணிகளிலும் காலியாக உள்ள 201 இடங்களுக்காக ஏலத்தில் பங்கேற்கிறார்கள். இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ₹110.5 கோடியுடன் நுழைகிறது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகக் குறைந்த அளவாக ₹41 கோடியை மட்டுமே கொண்டுள்ளது. ஃபிரான்சைஸிகள் 18 முதல் 25 வீரர்கள் வரையிலான அணிகளைக் கூட்ட வேண்டும், இது மூலோபாய கையகப்படுத்தல்களை முக்கியமானதாக ஆக்குகிறது.
ரைட் டு மேட்ச் விருப்பத்தை தக்கவைத்துக் கொண்ட அணிகள்
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை அதிகபட்சமாக ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டன. இதனால் அந்த இரு அணிகளும், ஏலத்தில் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) அட்டையைப் பயன்படுத்தத் தகுதியற்றவை என்றாலும், மற்ற எட்டு அணிகளும் ஆர்டிஎம் விருப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே ஐந்து கேப்டு வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், கேப் செய்யப்படாத வீரர்களுக்கு மட்டுமே ஆர்டிஎம்மைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலம் நேரடி ஒளிபரப்பு
மேலே குறிப்பிட்டுள்ளபடி, சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஏல செயல்முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் ஜியோசினிமாவில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்படும். சவுதி அரேபியாவில் ஐபிஎல் ஏலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், வரவிருக்கும் சீசனுக்கான தங்கள் பட்டியலை வலுப்படுத்த சிறந்த திறமையாளர்களுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிடும் என்பதால், ரசிகர்கள் ஏலத்தைக் காண ஆர்வமாக உள்ளனர்.