Page Loader
ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ

ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 27, 2025
06:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட ஆயுதப்படைகளை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறைவு விழா நடைபெற உள்ளது. பிசிசிஐ ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற சேவைக்கும், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரில் அவர்களின் செயல்களைக் கருத்தில் கொண்டு, வணக்கம் செலுத்த விரும்புவதாக பிசிசிஐ பிரதிநிதி சைகியா பிடிஐயிடம் தெரிவித்தார். ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள் அழிப்பு 

26 அப்பாவி பொதுமக்களை கொன்றதற்காக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை இந்த நிகழ்வுக்கு பிசிசிஐ அழைத்துள்ளது. இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கிய ஐபிஎல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.