IPL 2024 : வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விபரம்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன் அணிக்கு திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்பட்டார். பொதுவாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வர்த்தகம் செய்யும் வர்த்தக சாளரம் ஐபிஎல் சீசன் முடிந்த ஏழு நாட்களுக்கு பிறகு தொடங்கி, ஐபிஎல் ஏலம் நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் முடிவடையும். அதன்படி ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், டிசம்பர் 12 வரை அணிகள் வீரர்களை வர்த்தக பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், ஐபிஎல்லில் என்னென்ன முறையில் வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்கிறது என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
அணிகள் மேற்கொள்ளும் வர்த்தக முறைகள்
வர்த்தகத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு அணியானது மற்றொரு ஐபிஎல் அணியில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களை வாங்க மட்டும் செய்வது ஒரு வழி வர்த்தகம் ஆகும். அதேபோல் அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ளும் முறையும் உள்ளது. இது இருவழி வர்த்தகமாகும். ஒரு வழி வர்த்தகம் மற்றும் இருவழி வர்த்தக முறைகள் மூலம் வீரர்களை மாற்ற, வீரர்களின் ஒப்புதல் கட்டாயம் தேவையாகும். ஆல்ரவுண்டரும் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு மாறியது ஒரு வழி வர்த்தகத்தின் உதாரணமாகும். இதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை மாற்றியது இருவழி வர்த்தகத்திற்கு உதாரணமாகும்.
ஒருவழி வர்த்தகம் செயல்படும் முறை
ஒரு வீரர் மற்றொரு ஐபிஎல் அணியிலிருந்து சலுகையைப் பெறுகிறார் என்றால், அவர் தன்னை அந்த அணிக்கு வர்த்தகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக அவர் ஏற்கனவே இருக்கும் அணிக்குத் தெரிவிக்கலாம். அதேபோல் வீரரை விற்கும் முடிவை அவரது சம்மதத்தைப் பெற்ற பிறகு, அணி உரிமையாளரும் எடுக்கலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், வீரர் மற்றும் அவரது தற்போதைய ஐபிஎல் அணிக்கு இடையே பரிமாற்ற கட்டணம் விவாதிக்கப்படுகிறது. உதாரணமாக, ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு மாறியபோது, வீரர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மூலம் பரிமாற்றக் கட்டணத்தை முடிவு செய்திருப்பார்கள்.
வீரருக்கு பரிமாற்ற கட்டணத்தில் இருந்து வருமானம் கிடைக்குமா?
ஒரு வீரர் பரிமாற்றக் கட்டணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சம்பாதிக்க முடியும். பரிமாற்றக் கட்டணத்தில் பிசிசிஐக்கு வரம்பு எதுவும் இல்லை. பரிமாற்றக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கேட்க வீரர்களுக்கு உரிமை உண்டு. உதாரணமாக, ஒரு வீரரின் பரிமாற்றக் கட்டணம் ரூ. 30 கோடியாக இருந்தால், அவர் வெளியேறும் அணியிலிருந்து 20 சதவீதம் அல்லது ஆறு கோடியைக் கேட்கலாம். இந்த தொகை ஒரு முறை செலுத்தப்படும். பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானதும், அது பிசிசிஐக்கு அனுப்பப்படும். வீரர் நகரும் அணி, வீரரை விடுவிக்கும் அணிக்கு பரிமாற்றக் கட்டணத்தை செலுத்துகிறது. இதற்கிடையே, இதுவரை ஹர்திக் பாண்டியாவின் பரிமாற்றக் கட்டணம் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறும் வீரருக்கு பணம் செலுத்துவது யார்
உதாரணமாக, ஹர்திக் பாண்டியா விஷயத்தில், மும்பை இந்தியன்ஸ் தனது பர்ஸிலிருந்து ரூ.15 கோடி வருடாந்திர கட்டணத்தை அவருக்கு செலுத்த வேண்டும். இந்த தொகை ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அவரை அணியில் இணைத்துக் கொள்வதற்காக செலுத்திய தொகையாகும். கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.95 கோடிக்கு பர்ஸ் வைத்திருந்தன. இந்த ஆண்டு மினி ஏலம், ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டு ரூ.94.5 கோடி செலவிட்டுள்ளது. எனவே வரவிருக்கும் ஏலத்தில் அவர்கள் 5.50 கோடி ரூபாய் மட்டுமே வைத்திருந்தனர். ஆனால், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரை விடுவித்துள்ளதால், போதுமான பணம் கையிருப்பில் உள்ளது.