டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பை சவுரவ் கங்குலிக்கு வழங்க டெல்லி கேப்பிடல்ஸ் முயற்சி செய்யலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கங்குலி இந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் மட்டுமல்லாது டெல்லி கேப்பிடல்ஸ் பிராண்டின் கீழ் இயங்கும் மகளிர் அணி, எஸ்ஏ20 இல் பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் ஐஎல்டி20 இல் துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிக்கும் பொறுப்பாளர் ஆனார். மேலும் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து, 2019 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார்.
ஐபிஎல் 2023இல் படுதோல்வியை சந்தித்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் 2023 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்ட நிலையில், முதல் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவியது. சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தற்போது பிளேஆப் வாய்ப்பை இழந்து நிற்கிறது. இந்நிலையில் புதன்கிழமை (மே 17) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டெல்லி கேப்பிடல்ஸ் மோதலில் அணியின் டக் அவுட்டில் கங்குலி இருப்பது பெரிய விஷயம் என்று பதான் கூறியுள்ளார். கங்குலி அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால் அடுத்த சீசனுக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும் இந்திய வீரர்களின் உளவியல் அறிவும், டிரஸ்ஸிங் ரூமை எப்படி நடத்துவது என்பதும் கங்குலிக்கு நன்றாகவே தெரியும் என்று பதான் கூறினார்.