சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம்
ஐபிஎல் 2023 தொடரின் 49வது போட்டியில் சனிக்கிழமை (மே 6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளன. புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள மைல்ஸ்டோன்கள்
ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் இன்னும் 5 சிக்சர்கள் அடித்தால் 100 சிக்சர்கள் எனும் மைல்ஸ்டோனையும், 4 விக்கெட்டுகள் எடுத்தால் 150 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனையும் எட்டுவார். ரோஹித் ஷர்மா ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க இன்னும் 2 சிக்சர்கள் தேவை. சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் 3,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்ட 89 ரன்களும், 100 சிக்சர்கள் எனும் மைல்ஸ்டோனை எட்ட இன்னும் 4 சிக்சர்களும் தேவை. சிவம் துபே ஐபிஎல்லில் 1,000 ரன்களை எட்ட இன்னும் 48 ரன்கள் தேவை. டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களை எட்ட அம்பதி ராயுடு இன்னும் 47 ரன்கள் எடுக்க வேண்டும்.