ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் ஆண் பங்கேற்றதாக வெடித்தது சர்ச்சை
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தாலும், இந்த வெற்றி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 66கிலோ எடைப்பிரிவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி அல்ஜீரியாவின் இமானே கெலிஃபுடன் மோதினார். இதில் அல்ஜீரியாவின் கெலிஃப் இத்தாலிய வீராங்கனையை 46 வினாடிகளில் வீழ்த்தினார். இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் ஆண்தன்மையுடன் இருந்ததாகவும், அவர் பெண்களுக்கான போட்டியில் பங்கேற்றது தவறு என ஜே.கே.ரவுலிங், எலான் மஸ்க் உள்ளிட்ட பல சர்வதேச பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சைக்கு பிறகு விளக்கம் அளித்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம்
சமூக ஊடகங்களில் இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்கள் வந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) இமானே கெலிஃப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐஓசி வெளியிட்டுள்ள பதிலில், "பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் போட்டியின் தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகள் மற்றும் பாரீஸ் 2024 குத்துச்சண்டை பிரிவு அமைத்த அனைத்து பொருந்தக்கூடிய மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்குகிறார்கள். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இரண்டு பெண் வீராங்கனைகள் போட்டியிடுவது பற்றிய தவறான தகவல்களை நாங்கள் அறிக்கைகளில் பார்த்தோம். இரண்டு வீராங்கனைகளும் பெண்கள் பிரிவில் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்." எனத் தெரிவித்துள்ளது.