ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள்; புதிய வரலாறு படைத்த விராட் கோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேற, அதன் பிறகு களத்திற்கு வந்த வந்த விராட் கோலி பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 50வது சதமாகும். மேலும், ஒருநாள் உலகக்கோப்பையில் இது அவருக்கு ஐந்தாவது சதமாகும்.
சச்சின் டெண்டுல்கரின் மேலும் இரண்டு சாதனைகளை முறியடித்த விராட் கோலி
ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக்கோப்பை சீசனில் 673 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், விராட் கோலி தற்போது அதை கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிகமுறை 50+ ஸ்கோர்களை எடுத்தவர்கள் பட்டியலில் இதற்கு முன்னர் தலா 7 முறையுடன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாகிப் அல் ஹசனுடன் விராட் கோலி சமநிலையில் இருந்தார். இந்த போட்டியில் 50+ஸ்கோரை எட்டியதன் மூலம், அவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளி 8 முறை 50+ ஸ்கோர்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.