INDvsNZ Semifinal : போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் மைதானம்; எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா?
மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவம்பர் 15) இந்தியா vs நியூசிலாந்து இடையேயான ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கு நடந்த முந்தைய நான்கு போட்டிகளில், மூன்றில் முதலில் பேட்டிங் செய்த அணி 350க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் மூன்று போட்டிகளில் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தனர். இலங்கை இந்த மைதானத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியிடம் 55 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இதனால் மைதானத்தின் நிலவரம் அணிகளின் வெற்றி தோல்வியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
மைதானத்தை ஆய்வு செய்யும் இந்திய அணி
இந்த உலகக்கோப்பை சீசனில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இன்னும் வான்கடே மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், இது இந்திய அணிக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. போட்டியில் மைதானம் நிச்சயமாக ஆதிக்கம் செலுத்தும் என்பதால் அதை சாதகமாக பயன்படுத்துவது குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் மும்பை சென்றதும் நேரடியாக மைதானத்தில் இறங்கி ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் அரையிறுதியிலும் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த போட்டியில் தான் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த அணி 300 ரன்களுக்கு குறைவாக எடுத்தது குறிப்பிடத்தக்கது.