INDvsNZ Semifinal : இந்திய அணியில் மாற்றமா? எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை (நவம்பர் 15) அரையிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. புதன்கிழமை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை நடந்த 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவாக இருந்தாலும், இனிதான் அதிக சோதனையை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக, 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, அதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த தோல்விக்கு பழிவாங்க, இந்த முறை ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி முனைப்புடன் தயாராகி வருகிறது.
இந்திய அணியின் விளையாடும் லெவனில் மாற்றம் இல்லை
மிகவும் முக்கியமான இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் லெவனில் எந்த மாற்றமும் செய்ய வேண்டும் என கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய விளையாடும் லெவன் சிறப்பான ஃபார்மில் உள்ளதாலும், இது மாற்று வழிகளை சோதிப்பதற்காக களம் அல்ல என்பதாலும், அதே விளையாடும் லெவனுடன் களமிறங்க உள்ளது. இந்தியா (விளையாடும் லெவன்) : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.