டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளில் ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார். கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், இருவரும் சேர்ந்து நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுப்பதை தடுத்தனர். இந்நிலையில், இந்த போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணிக்காக ஐந்தாவது அதிக விக்கெட் வீழ்த்தியவராக ரவீந்திர ஜடேஜா முன்னேறியுள்ளார். ரவீந்திர ஜடேஜா தற்போது தற்போது 314 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் 311 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் பின்தங்கியுள்ளனர். இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் 533 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.