INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் டான்சித் ஹசன் (51) மற்றும் லிட்டன் தாஸ் (66) ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
எனினும், அதன் பின்னர் களமிறங்கியவர்களில் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களும், முகமதுல்லா 46 ரன்களும் எடுத்த நிலையில், மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதன் மூலம் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
India beats Bangladesh by 7 wickets
விராட் கோலி அபார சதம்
257 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ரோஹித் ஷர்மா 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்ட நிலையில், ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், விராட் கோலி அபாரமாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் 103 ரன்கள் எடுத்தார்.
அவருடன் கேஎல் ராகுலும் தன் பங்கிற்கு 34 ரன்கள் எடுக்க, 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.