INDvsBAN : ஷுப்மன் கில் சதம் வீண்; கடைசி ஓவரில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரின் பொறுப்பான பேட்டிங் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் ஹ்ரிதோய் 54 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷுப்மன் கில் சதமடித்தும் இந்தியா தோல்வி
இந்திய கிரிக்கெட் அணி 266 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, அடுத்தடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒருபுறம் வரிசையாக வீரர்கள் அவுட்டாகிய நிலையில், எதிர்முனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் நிலைத்து நின்று 121 ரன்கள் குவித்தார். எனினும், அவர் 44வது ஓவரில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், லோயர் ஆர்டரில் களமிறங்கிய அக்சர் படேல் அபாரமாக விளையாடி 42 ரன்கள் குவித்து அணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினாலும், கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.