INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : 36 ஆண்டுகால சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 36 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் சுழற்பந்துவீச்சில் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்தது. இது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களிடம் ஒரு இன்னிங்சில் இழந்த அதிக விக்கெட்டுகளாகும்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Ravindra Jadeja scripts unique record with 3 wickets
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்பாக, 1987இல் மணிந்தர் சிங் இந்த சாதனையை செய்த நிலையில், அவர் 36 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார்.
இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் ஜடேஜா 37 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் கபில்தேவ் 45 விக்கெட்டுகளுடன் உள்ளார்.
மேலும், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தமாக 100 விக்கெட் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.