INDvsAUS Final : பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கை, நேரலை விபரங்கள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்த போட்டி நடக்க உள்ள நிலையில், இந்தியா மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதிக முறை கோப்பையை வென்றுள்ள அணியாக உள்ள ஆஸ்திரேலியா தற்போது ஆறாவது முறையாக கோப்பையை வென்று தனது மகுடத்தில் மேலும் ஒரு கிரீடத்தை சேர்க்க ஆர்வமாக உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டி விபரங்கள், வானிலை அறிக்கை மற்றும் போட்டியை வீட்டில் இருந்து நேரலையில் எப்படி பார்ப்பது என்பவனற்றை இதில் பார்க்கலாம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 150 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 83 முறை வென்றுள்ளது. மறுபுறம், இந்திய கிரிக்கெட் அணி 57 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், 10 இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்துள்ளன. தவிர, ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில், இரு அணிகளும் 13 தடவை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதிலும், முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா 8 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இந்தியா 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 2 முறை நேருக்கு நேர் மோதியதில், இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
லைவ் ஸ்ட்ரீமிங், டெலிகாஸ்ட் விவரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. அரைமணி நேரம் முன்னதாக 1.30 மணிக்கு டாஸ் போடப்படும். ஒருநாள் உலகக்கோப்பையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டுகளிக்கலாம். ஆங்கில வர்ணனையுடன் போட்டியை பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி சேனல்களிலும், தமிழ் வர்ணனையுடன் போட்டியை பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் எச்டி சேனல்களிலும் கண்டுகளிக்கலாம். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் போட்டியை இலவசமாக பார்க்கலாம்.
பிட்ச் அறிக்கை
அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியம் இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நடத்த முழுமையாக தயாராகியுள்ள நிலையில், இந்த மைதானம் பேட்டர்கள் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ள மைதானங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் எடுத்ததே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும், நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 32 ஒருநாள் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் 17 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 15 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுளளது.
வானிலை அறிக்கை
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், வானிலை அறிக்கை சாதகமாகவே உள்ளது. அக்யூவெதரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) திட்டமிடப்பட்ட பகல்-இரவு ஆட்டத்தின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் போட்டியிடுவதால், மழையால் எந்தவித இடையூறும் இன்றி போட்டி நடப்பது உறுதி. அதே நேரம், மழை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க முடியாவிட்டால் ரிசர்வ் நாளான நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் போட்டி நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.