INDvsAUS Final : 315 ரன்கள் எடுத்தாதான் ஜெயிக்க முடியும்; பிட்ச் கியூரேட்டர் கணிப்பு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் 2023 ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியை நடத்த தயாராகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. முன்னதாக, அரையிறுதி போட்டியின்போது பிட்ச் மாற்றப்பட்டது குறித்த சர்ச்சை வெடித்த நிலையில், இந்த போட்டியில் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஐசிசி தனது ஆடுகள ஆலோசகர் ஆண்டி அட்கின்சனை மைதான தயாரிப்பை மேற்பார்வையிட அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்டி அட்கின்சனும் அகமதாபாத்திலேயே தங்கி மைதான தயாரிப்பை கவனித்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் மைதானத்தின் மேற்பரப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிட்ச் கியூரேட்டர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிட்சை தயார் செய்து வரும் நிலையில், ஆடுகளத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், போட்டிக்கு எந்த பிட்ச் பயன்படுத்தபப்டும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கியூரேட்டர் தெரிவித்துள்ளார். எனினும், "கருப்பு மண்ணில் கனமான ரோலர் பயன்படுத்தப்பட்டால், மெதுவான பேட்டிங் டிராக்கை உருவாக்க வேண்டும். அங்கு நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெறலாம். குறைந்தபட்சம் முதல் இன்னிங்சில் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருக்கும்." என்று கியூரேட்டர் கூறினார்.