
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கும் அவரது நீண்ட கால காதலி திவ்யாவுக்கும் செவ்வாய்கிழமை (நவம்பர் 28) உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுடன் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
முகேஷ் மற்றும் திவ்யா இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள், முகேஷ் கோபால்கஞ்ச் மற்றும் திவ்யா சாப்ராவைச் சேர்ந்தவர் ஆவார்.
திருமணத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இருவரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Mukesh kumar likely to join in 4th t20i against australia
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகேஷ் குமார்
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முகேஷ் குமாரும் இடம் பெற்றுள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இடம் பெற்றிருந்த முகேஷ் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்து சென்றுள்ளார்.
மூன்றாவது போட்டியில் முகேஷ் குமாருக்கு பதிலாக ஆவேஷ் கான் களமிறங்கிய நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி ராய்பூரில் நடக்க உள்ள நான்காவது போட்டியில் அவர் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே முதல் இரண்டு போட்டிகளில் 8 ஓவர்கள் பந்துவீசிய முகேஷ் குமார் 72 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.