ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா கிரிக்கெட் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் விளையாட்டின் காலிறுதிச் சுற்றில் இன்று நேபாளை அணியை எதிர்கொண்டது இந்தியாவின் இரண்டாம் தர இளம் கிரிக்கெட் அணி. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இந்திய கேப்டன் ருத்துராஜ் கெயிக்வாட், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரான யசஷ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 100 ரன்களைக் குவித்தார். பிற இந்திய பேட்டர்கள் சோபிக்காத நிலையில், இறுதி ஒரு ஓவரில் 23 ரன்களைக் குவித்து இந்தியா 202 ரன்களைக் குவிக்க உதவினார் ரிங்கு சிங். நேபாள அணியின் தீபேந்தர் சிங் அயிரி மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நேபாள அணிக்கு 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேபாளத்தைக் கட்டுப்படுத்திய இந்தியா:
நேபாளத்தின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். நேபாள கேப்டன் 3 ரன்களை மட்டுமே குவித்து ரவி பிஷ்னோயின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அந்த அணியின் தீபேந்தர் சிங் அயிரி மற்றும் சந்தீப் ஜோரா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடியனாலும் 32 மற்றும் 29 என குறைவான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சார்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இரு பந்து வீச்சாளர்களும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே குவித்தது நேபாள அணி. 23 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இந்தியா.