இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியன் மைதானத்தில் மோத உள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்த போட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் 18வது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாகும். பாக்சிங் டே டெஸ்ட் என்பது ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்கி 30 அல்லது அதற்கு முன்னதாக முடியும் போட்டியை குறிப்பிடும் ஒன்றாகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில், டிசம்பர் 26 அன்று தொடங்கும் அனைத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் இதுவரையிலான பாக்சிங் டே டெஸ்ட் குறித்த புள்ளிவிபரங்களை இதில் பார்க்கலாம்.
10 ஆண்டுகளாக பாக்சிங் டே டெஸ்டில் தோல்வியே காணாத இந்தியா
1985இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பாக்சிங் டே டெஸ்டில் விளையாடியது. இதுவரை 17 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. எனினும், 2014 முதல் இந்தியா விளையாடிய கடைசி நான்கு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பாக்சிங் டே போட்டியிலும் தோல்வியைக் கண்டிராத அணியாக உள்ள நிலையில், தனது 18வது பாக்சிங் டே போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் அந்த சாதனையை தக்கவைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாக்சிங் டே போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்திறன்
2003இல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், வீரேந்திர சேவாக் அந்த போட்டியில் 195 ரன்கள் குவித்தார். இதுதான், பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக உள்ளது. சேவாக்கிற்கு அடுத்த இடத்தில் 169 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், அஜிங்க்யா ரஹானே 147 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஜஸ்ப்ரீத் பும்ரா 2018இல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 33 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்துவீச்சாக உள்ளது. ரவீந்திர ஜடேஜா (6/138) மற்றும் அனில் கும்ப்ளே (6/176) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.