காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 23 வயதுக்குட்பட்டோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் 13 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியக் குழு அசத்தியுள்ளது. இதன் மூலம் 1982 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் புகழ்பெற்ற வில்கின்சன் ஸ்வார்ட் கோப்பையையும் இந்தியா முதன்முறையாக தட்டிச் சென்றுள்ளது.
பதக்க வேட்டை
இறுதி நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வேட்டை
போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அன்று நடைபெற்ற மூத்தோர் பிரிவின் ஆண்கள் சேபர், பெண்கள் சேபர், ஆண்கள் எப்பே, பெண்கள் எப்பே மற்றும் பெண்கள் ஃபாயில் ஆகிய 5 பிரிவுகளிலும் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களை அள்ளின.
மேலும் ஆண்கள் ஃபாயில் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
தொடரின் முதல் நாளிலேயே 23 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 17 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் தங்களது கணக்கைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் போட்டிகள்
தனிநபர் பிரிவுகளிலும் முத்திரை பதித்த வீரர்கள்
தனிநபர் பிரிவுகளில் நிக்கில் வாக், ஜாய்ஸ் அஷிதா, பிராச்சி லோஹன், ஜெஃபர்லின், தனிஷ்கா காத்ரி, கனகலக்ஷ்மி, ராஜேந்திரன் சாந்திமோல் ஷெர்ஜின் மற்றும் சிங் கரன் சிங் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
பயிற்சியாளர்கள் பாரத்ஜி சகோர், ஸ்ரீஹரி பைஸ், சங்கர் நாராயணன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அம்ருதா பால்கவாடே ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியா
இந்திய வாள்வீச்சு விளையாட்டின் அடுத்தகட்ட மைல்கல்
காமன்வெல்த் அரங்கில் இந்தியா பெற்றுள்ள இந்த அபார வெற்றி, நாட்டின் வாள்வீச்சு விளையாட்டிற்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இப்போட்டித் தொடரில் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டு, வீரர்களுக்கான சர்வதேசப் பயிற்சி வசதிகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிக்க இந்திய வாள்வீச்சு சங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.