மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா தனது முதல் மகளிர் கண்பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியதுடன், தொடர் முழுவதும் தோல்வியே அடையாத அணியாகவும் ஆதிக்கம் செலுத்தியது. டாஸில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு, நேபாள அணியை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுக்க மட்டுமே அனுமதித்தனர். இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் துல்லியமான ஃபீல்டிங், வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.
புலா சரேன்
புலா சரேனின் அசாத்திய ஆட்டம்
பின்னர், இலக்கை நோக்கி ஆடிய இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க வீராங்கனை புலா சரேனின் (Phula Saren) ஆட்டம் குறிப்பிடத்தக்கது. அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து, 162.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். 13 வது ஓவரில் அவர் அடித்த பவுண்டரி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றிக்குக் காரணமாக இருந்த புலா சரேனுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.