இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: இருதரப்பு தொடர்கள் இல்லை, ஆனால் 14 மாதங்களில் 14 போட்டிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்புத் தொடர்களில் விளையாடுவதில்லை என்றாலும், கடந்த செப்டம்பர் 2025 முதல் இதுவரை 14 மாதங்களில் சீனியர், 'ஏ' அணி மற்றும் யு-19 தொடர்கள் என மொத்தம் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2007-ஆம் ஆண்டு முழுமையான இருதரப்புத் தொடரின்போது கூட ஓராண்டில் 10 போட்டிகளில் மட்டுமே மோதியிருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாக மோதுவது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நவம்பர் 14 யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் நடைபெற்ற 'ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை' போட்டியிலும் இந்தியா ஏ அணி பாகிஸ்தானிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
எல்லை மீறும் வீரர்களின் மோதல்
வணிக லாபத்திற்காக ஒரே பிரிவில் சேர்க்கப்படுகிறதா?
பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வணிக லாபத்திற்காகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் திட்டமிட்டு ஒரே பிரிவில் சேர்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருபுறம் வியாபாரத்திற்காக அடுத்தடுத்து போட்டிகளை நடத்தும் நிர்வாகங்கள், மறுபுறம் மைதானத்தில் வீரர்களிடையே நிலவும் அநாகரிகமான மோதல்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன.
2025 ஆசியக் கோப்பையில் கைகுலுக்க மறுத்ததில் தொடங்கிய சர்ச்சை, ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய சைகைகள், யு-19 இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களின் வரம்பு மீறிய கொண்டாட்டம் மற்றும் நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணாவின் வாக்குவாதம் என இளம் வீரர்கள் மத்தியிலும் பகைமை உணர்வு இயல்பான ஒன்றாக மாறி வருவது விளையாட்டின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாகிகளின் மெத்தனம்
வெற்றி பெற்றும் இந்திய அணிகளுக்குக் கிடைக்காத ஆசிய கோப்பைகள்
கிரிக்கெட் நாகரிகத்தைத் தாண்டி, ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கோப்பைத் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகளுக்கு இன்றுவரை அந்தக் கோப்பைகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் வாரியத் தலைவருமான மொஹ்சின் நக்வி மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோரின் அரசியல் முரண்பாடுகளால், சாம்பியன்கள் தங்களது கோப்பைக்காகக் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.
வெறும் பணம் மற்றும் தொலைக்காட்சி விளம்பர வருவாய்க்காக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை வரிசையாக நடத்தி, அடுத்த தலைமுறை வீரர்களிடம் வன்மத்தை விதைப்பதை கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.