உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் ஆதிக்கம் செலுத்திய காலம் முதல், கிரிக்கெட் வரை எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடையே அதிக ஆர்வம் தொற்றிக் கொள்ளும். இந்த ஆர்வம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. ஆனால், தனிநபர் போட்டிகளில் புகழ்பெற்ற மில்கா சிங்குக்கும் பாகிஸ்தானின் பழம்பெரும் ஓட்டப்பந்தய வீரர் அப்துல் காலிக்கும் இடையிலான மோதலுக்கு பிறகு, அதுபோன்ற ஒரு சூழல் எழாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் மூலம் அத்தகைய ஒரு மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் ஹங்கேரியில் நடந்துவரும் தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா vs அர்ஷத் நதீம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) ஹங்கேரியில் நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் அர்ஷத் நதீம் ஆகியோர் அதிக கவனத்தை பெற்றுள்ளார்கள். முன்னதாக, தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.77 மீ தூரம் வீசி முதலிடம் பிடித்தார். அதே நேரத்தில் அர்ஷத் நதீம் 86.79 மீ வீசி இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் இருவரும் நேரடியாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதுவரை ஒருமுறை கூட நீரஜை களத்தில் அர்ஷத் நதீம் தோற்கடிக்க முடியவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் நீரஜ் சோப்ராவுக்கு அவர் கடும் போட்டியைக் கொடுப்பார் என்பதால் இறுதிப்போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.