டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமான 100 ரன்கள்; 12 ஆண்டுகால சாதனையை முறியடித்தது இந்தியா
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் 18 வது லீக் ஆட்டத்தில், நமீபியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிவேகமாக 100 ரன்களைக் கடந்த அணி என்ற 12 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தது. இதற்கு முன்னதாக 2014 இல் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்தியா இன்று அதனை 6.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்துள்ளது.
தொடக்க ஜோடி
இஷான் கிஷன் - சஞ்சு சாம்சன் அதிரடி
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நமீபியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சஞ்சு சாம்சன் வெறும் 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் விளாசி மிரட்டினார். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே அரைசதம் கடந்து, இந்தச் சாதனையைச் செய்த 5 வது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஜோடியின் அதிரடியால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்களைக் குவித்தது.
பவர்பிளே
பவர்பிளே திட்டமிடல் குறித்து இஷான் கிஷன்
போட்டிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், அதிரடி ஆட்டத்திற்குப் பின்னால் உள்ள திட்டத்தை விளக்கினார். "நாங்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறோம். பவர்பிளே ஓவர்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் திட்டம். நமீபியாவின் ரூபன் ட்ரம்பெல்மேன் முதல் ஓவரைச் சிறப்பாக வீசினார், எனவே அப்போது நாங்கள் அவசரப்படவில்லை. பந்து ஸ்விங் ஆவது நின்றவுடன், ஒரு ஓவருக்கு 15 ரன்கள் எடுப்பதற்குப் பதில் 24 ரன்கள் வரை எடுக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டோம்." என்று அவர் கூறினார்.
நமீபியா
நமீபியாவின் தோல்வி மற்றும் இந்தியாவின் ஆதிக்கம்
210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் திணறியது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. பேட்டிங்கில் ஒரு கட்டத்தில் 230 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவர்களில் வேகம் குறைந்ததால் இந்தியா 209 ரன்களுடன் முடித்தது. இருப்பினும், பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு நமீபியாவைச் சுருட்டிய இந்தியா, இந்த மெகா தொடரில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.