LOADING...
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் 2026: அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு! டி20 போட்டிகள் ரத்தா?
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் 2026: அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு! டி20 போட்டிகள் ரத்தா?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
06:26 pm

செய்தி முன்னோட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்தத் தொடரின் மூலம் மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் வலுவாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 முதல் டெஸ்ட் தொடர்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 ஆம் தேதி வரை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவில் உள்ள சின்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. கடந்த 2017இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியதற்குப் பிறகு, தற்போது சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாட செல்வது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டி

இந்த ஆண்டின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவால்

இந்திய அணி கடந்த ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றிருந்த போதிலும், ஆப்கானிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இல்லாததால் அந்தப் புள்ளிகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த 2026 ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடப் போகும் முதலாவது அதிகாரப்பூர்வ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்த இலங்கைத் தொடர்தான் என்பதால் இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டி20 தொடர்

டி20 தொடர் ரத்து செய்யப்படக் காரணம் என்ன?

முன்னதாக, இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டி20 போட்டிகள் குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. இந்திய அணிக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியான சர்வதேசப் போட்டிகள் இருப்பதால், இந்தச் சூழலில் டி20 தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே 20 ஓவர் தொடர் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

போட்டிகள்

இந்திய அணியின் இடைவிடாத கிரிக்கெட் அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்த கையோடு, ஜூலை மாத இறுதியில் ஜிம்பாப்வே நாட்டுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. அந்தத் தொடர் முடிந்த அடுத்த சில தினங்களிலேயே இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதுமட்டுமன்றி, செப்டம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் மற்றொரு டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement