மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 2025ல் இடது முழங்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் மகளிர் ஐபிஎல் 2026 தொடர்களைத் தவறவிட்ட யாஸ்திகா பாட்டியா, தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழு உடல் தகுதியுடன் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல், சுமார் ஓராண்டிற்குப் பிறகு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஏ அணியை வழிநடத்தி ஆசியக் கோப்பையை அவர் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நந்தினி சர்மா
நந்தினி சர்மாவிற்கு கிடைத்த அங்கீகாரம்
கஷ்வீ கௌதம் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோர் காயத்தால் அணியிலிருந்து விலகிய நிலையில், வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மாவிற்கு முதல்முறையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்தார். அந்த சீசனில் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா மற்றும் காயம் குறித்த தகவல்கள்
தென்னாப்பிரிக்கத் தொடரில் ஸ்மிருதி மந்தனா இல்லாத சமயத்தில் தொடக்க வீராங்கனையாகக் களம் இறங்கி அதிரடி காட்டிய அனுஷ்கா சர்மா தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கஷ்வீ கௌதம் வலது முழங்கால் காயம் காரணமாகவும், அமன்ஜோத் கவுர் காயம் காரணமாக அடுத்த 4 முதல் 5 மாதங்கள் விளையாட முடியாது என்பதாலும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளனர் என்பதை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அமிதா சர்மா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அணி வீராங்கனைகள் விபரம்
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பட்டியல்
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, கிராந்தி கௌட், ராதா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி, அருந்ததி ரெட்டி, அனுஷ்கா சர்மா, தீப்தி சர்மா. இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கௌட், சாயலி சத்கரே, சினே ராணா.