INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
அக்டோபர் 5ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள். கடந்த செப்டம்பர் 22ல் நடைபெற்ற முதல் போட்டியில் சிரமமின்றி ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டது கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்தியப் படை. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் போட்டியைத் தொடர்ந்து, இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு:
இன்றைய போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய அணி சார்பில் ருத்துராஜ் கெயிக்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சில ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த ருத்துராஜ், 12 பந்துகளில் 8 ரன்கள் குவித்திருக்க, 4வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர், ஸ்ரேயாஷ் ஐயருடன் கூட்டணி அமைத்தார் சுப்மன் கில். இருவருமே நிதானான ஆட்டத்தைக் கடைப்பிடித்து, விக்கெட் விழாமல், ரன்களையும் சற்று வேகமாகவே குவித்தனர். 31வது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்தது இந்தக் கூட்டணி.
சதமடித்த இந்திய வீரர்கள்:
சதம் கடந்து அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஷ் ஐயர். அதன் பிறகு, கேப்டனான கே.எல்.ராகுலுடன் இணைந்து சுப்மன் கில்லும் சதம் கடந்து, அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய இஷான் கிஷன் சிறிய கேமியோ ஆடி 31 ரன்களைக் குவித்தார். கிஷனின் விக்கெட்டுக்குப் பின்பு சூர்ய குமாருடன் கூட்டணி அமைத்து அரைசதம் கடந்தார் கே.எல்.ராகுல். முதல் பத்து பந்துகள் தடுமாறிய சூர்யகுமார் யாதவ், 44வது ஓவரில் நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தன்னுடைய இன்னிங்ஸைத் தொடங்கினார். அதன் பின்பு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சற்றும் வளைந்து கொடுக்காத சூர்ய குமார் யாதவ், 194 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 37 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா:
பேட்டிங்குக்கு பெயர் போன இந்தூர் மைதானத்தில், இரு அணி பேட்டர்களுமே 300 ரன்களைக் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதுபோலவே, இந்திய பேட்டர்களுக்கு இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை. இந்தியா பேட்டர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அது ஆஸ்திரேலியாவிற்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஆஸ்திரேலாய சார்பில் கேமரான் கிரீன் 2 விக்கெடுக்களை வீழ்த்தினார். ஆடம் ஸாம்பா, சீன் அபாட் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்து, ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி.