பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னோடியில்லாத வகையில் 107 பதக்கங்களை வென்றதன் மூலம், இந்தியா, விளையாட்டில் புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில், சீனாவின் ஹாங்சோவில் அக்டோபர் 22 முதல் 28 வரையில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய குழுவை அனுப்பியுள்ளது. 4வது முறையாக நடக்க உள்ள பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவிலிருந்து 196 ஆடவர் மற்றும் 113 மகளிர் என மொத்தம் 309 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 2018இல் ஜகார்த்தாவில் நடந்த முந்தைய சீசனில் 188 வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்த முறை அதை விட அதிகபட்சமாக வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர்.
17 பிரிவுகளில் முதல்முறையாக பங்கேற்கும் இந்தியா
கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் முதல் முறையாக பங்கேற்கின்றனர். 2020 பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாரா மற்றும் சுமித் அன்டில் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வியாழக்கிழமை (அக்டோபர் 13) வீரர்களை வழியனுப்பி வைத்து, இதுவரை இல்லாத வகையில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, ஜகார்த்தாவில் 2018 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம் உள்ளிட்ட 72 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.