INDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகால சாதனைக்கு ஆபத்து; மூன்றாவது போட்டியிலும் தோற்றால் இந்திய அணியின் நிலை இதுதான்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த இரண்டிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2-0 என தொடரை வென்று முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றியின் மூலம், 2012 முதல் உள்நாட்டில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியையே கண்டிராத அணி என்ற இந்தியாவின் சாதனையை நியூசிலாந்து முறியடித்துள்ளது. மேலும், 1988க்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காத பெருமையைக் கொண்டிருந்த இந்திய அணியின் நீண்ட சாதனைக்கும், முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முடிவுரை எழுதியது.
டெஸ்ட் தொடரில் மற்றுமொரு சாதனை இழக்கும் அபாயம்
இந்நிலையில், எஞ்சிய மூன்றாவது போட்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்று, ஆறுதல் வெற்றியையாவது இந்திய கிரிக்கெட் அணி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, 24 ஆண்டுகளாக உள்நாட்டில் எந்தவொரு அணியாலும் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்படாத அணி என்ற இந்தியாவின் சாதனைக்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் ஆடியதைப் போலவே விளையாடினால், மூன்றாவது போட்டியிலும் தோற்று நிச்சயம் ஒயிட்வாஷ் செய்யப்படும் என கிரிக்கெட் ரசிகர்கள் அஞ்சுகின்றனர். இந்திய அணி கடைசியாக 2000ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர்
இதுவே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என எடுத்துக் கொண்டால், இந்தியா கடைசியாக 1997இல் இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் ஆட்டத்தை முடிந்தது. எனினும், தென்னாப்பிரிக்கத் தொடரைப் போல் அல்லாமல், இந்த தொடர் 0-0 என முடிந்தது. இந்த இரண்டு தொடர்களிலும், இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு, உள்நாட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் எந்தவொரு போட்டியிலும் வெல்ல முடியாமல் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகும் அவல நிலையில் உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டு வரும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.