வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூலை11) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2012இல் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற சாதனையை சமன் செய்தது. இது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இந்த போட்டியைப் பொறுத்தவரையில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் 4 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்து சிறப்பாகத் தொடங்கியது.
இந்திய அணியின் பந்துவீச்சு அபாரம்
இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் முறிந்தவுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு, இந்திய அணியால், வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய சுல்தானா கஸ்துன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுபுறம், மிகவும் எளிய இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய, தீப்தி சர்மா மற்றும் ஷபாலி வர்மா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.