இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது!
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (மே 15) சீன தைபே மற்றும் மலேசியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதிர்மான் கோப்பை 2023 இல் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறியுள்ளது.
மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சீன தைபே அணிகளுடன் சி குழுவில் இடம் பெற்ற இந்தியா, முதல் நாளில் சீன தைபேயிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியுடன் தொடங்கியது.
ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இரண்டாவது போட்டி நாளில் மலேசியாவுக்கு எதிராகவும் தோல்வி தொடர்ந்தது.
துருவ் கபிலா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி 16-21 மற்றும் 17-21 என்ற நேர் கேம்களில் மலேசியாவின் கோ சூன் ஹுவாட் மற்றும் லாய் ஷெவோன் ஜெமியிடம் தோல்வியடைந்து வெளியேறினர்.
kidambi srikanth pv sindhu loses
கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்துவும் அதிர்ச்சித் தோல்வி
கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21 மற்றும் 11-21 என்ற கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் தோற்று வெளியேறினார்.
இதற்கிடையே பிவி சிந்து கோ ஜின் வெய்க்கு எதிரான முதல் சுற்றில் வெற்றி பெற்றாலும், மலேசிய வீராங்கனை, அடுத்த இரண்டு சுற்றுகளிலும் 21-10 மற்றும் 22-20 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியா மலேசியாவிடம் 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருந்தாலும், தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பதால் சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.