அனைத்து ICC ஃபார்மெட்களிலும் முதலிடம், சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பைத் தொடர் வெற்றிக்குப் பிறகு, உலக கோப்பைத் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி.
நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்திய அணி.
இதற்கிடையில், அணிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அனைத்து ஃபார்மெட்களிலும் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது இந்திய அணி.
ஆம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட் ஃபார்மெட்களிலும் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இந்திய அணி.
கிரிக்கெட்
சாதனை படைத்த இந்தியா:
ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை பின்தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. அதே போல், டி20 தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் ஆஸ்திரேலியவும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இங்கிலாந்தும் இருக்கின்றன.
முன்னதாக தென்னாப்பிரிக்கா மட்டுமே ஒரே சமயத்தில் அனைத்து ஐசிசி ஃபார்மெட்களிலும் முதலிடத்தைப் பிடித்த அணி என்ற பெயரை பெற்றிருந்தது.
2012ம் ஆண்டு ஆகஸ்டில் இங்கிலாந்திடமிருந்து டெஸ்ட் மேஸைப் பறித்த போது இந்தப் புதிய சாதனையைச் செய்திருந்தது தென்னாப்பிரிக்கா.
தற்போது அதனைத் தொடர்ந்து, ஒரே சமயத்தில் அனைத்து ஐசிசி ஃபார்மெட் தரவரிசைப் பட்டியல்களிலும் முதலிடத்தைப் பிடித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவதாக இணைந்திருக்கிறது இந்தியா.
கிரிக்கெட்
வீரர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல்:
அணிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து, வீரர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் பல்வேறு இடங்களில் இந்திய வீர்ரகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
பேட்டர்கள்:
டி20 பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் சூர்ய குமார் யாதவ். ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சுப்மன் கில்.
பவுலர்கள்:
ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் முகமது சிராஜ். டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், மூன்றாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும் இருக்கிறார்கள்.
ஆல்ரவுண்டர்கள்:
டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார் ஹர்திக் பாண்டியா. அதேபோல், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், இரண்டாமிடத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், ஐந்தாவது இடத்தில் அக்ஷர் படேலும் இடம்பிடித்திருக்கிறார்கள்.