மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. ஐசிசி தரவரிசையில் இந்தியா ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20களில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையை செய்துள்ளது. இதற்கிடையில், மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் ஆசிய அணி மற்றும் உலகளவில் இரண்டாவது அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக, 2014 ஆம் ஆண்டு இந்த மைல்கல்லை தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக எட்டியது.
தரவரிசையில் இந்திய வீரர்களின் முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய அஸ்வின், டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் ஜடேஜா 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். அக்சர் படேல் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார் விபத்தில் சிக்கி, தற்போது சிகிச்சையில் உள்ள ரிஷப் பந்த் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார்.