
ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்த முதல் அணி; இந்தியா வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சதங்கள், கேஎல் ராகுலின் அரைசதம், சூர்யகுமாரின் கடைசி நேர அதிரடி ஆட்டம் மூலம் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது.
ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தபோது, மழை குறுக்கிட்டதால், 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
India tops in ODI Cricket with most sixes
18 சிக்சர்கள் அடித்த இந்திய அணி
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மொத்தம் 18 சிக்சர்களை அடித்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 6 சிக்சர்களை விளாசியிருந்தார்.
இந்நிலையில், இந்த சிக்சர்கள் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3,000 சிக்சர்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தற்போது 3,007 சிக்சர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 2,953 சிக்சர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இடத்திலும், 2,566 சிக்சர்களுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேலும், ஆஸ்திரேலியா (2,476), நியூசிலாந்து (2,387), இங்கிலாந்து (2,032), தென்னாப்பிரிக்கா (1,947), இலங்கை (1,779), ஜிம்பாப்வே (1,303), வங்கதேசம் (959) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.