ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : நான்காவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது இந்திய ஹாக்கி அணி
செய்தி முன்னோட்டம்
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணிக்கு போட்டியின் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்றி போட்டியின் முதல் கோலை பதிவு செய்தார்.
எனினும் அதன் பின்னர் 14வது நிமிடத்தில் மலேசியா கோல் அடித்த நிலையில், முதல் குவார்ட்டரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமனில் இருந்தனர்.
பின்னர், இரண்டாவது குவார்ட்டரில் இந்திய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில், மலேசியா மேலும் 2 கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது.
india made 3 gols in 11 minutes
11 நிமிட இடைவெளியில் 3 கோல் அடித்த இந்தியா
மூன்றாவது குவார்ட்டரின் முடிவில் 45வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார்.
மேலும் அதே சமயத்தில் விரைவாக செயல்பட்ட இந்திய அணி உடனடியாக குர்ஜந்த் சிங் மூலம் அடுத்த கோலை அடிக்க, மூன்றாவது குவார்ட்டர் முடிவில் 3-3 என இரு அணிகளும் சமநிலைக்கு சென்றன.
இதையடுத்து திக்திக் என தொடங்கிய கடைசி குவார்ட்டரில் இந்திய அணியின் ஆகாஷ்தீப் சிங் 56வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் மூலம் 4வது முறையாக பட்டத்தை கைப்பற்றி அதிக ஆசிய சாம்பியன்ஸ் பட்டங்களை கொண்ட அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.