Loading...
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த 7 நாடுகள் பட்டியலை வெளியிட்ட IOC; இந்தியாவிற்கு வாய்ப்பு கிட்டுமா?
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த 7 நாடுகள் பட்டியலை வெளியிட்ட IOC; இந்தியாவிற்கு வாய்ப்பு கிட்டுமா?

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
06:05 pm

செய்தி முன்னோட்டம்

உலக விளையாட்டுத் திருவிழாவான 2036 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை தனது மண்ணில் நடத்தும் இந்தியாவின் கனவு அடுத்த முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த உலகளவில் ஆர்வமுள்ள 7 முன்னணி நாடுகளின் உத்தேசப் பட்டியலில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அறிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் மைய நகரமாக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான புதிய வரைவு நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை ஐஓசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தேர்வு நடைமுறை

போட்டி களத்தில் உள்ள 7 நாடுகள்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தகவலின்படி இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய 7 நாடுகள் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தொடக்கக்கட்டப் பேச்சுவார்த்தைப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இந்நாடுகள் தங்களது விரிவான திட்டங்களை வரும் நவம்பர் மாதத்தில் ஐஓசியின் 'எதிர்கால புரவலர் ஆணையத்திடம்' விளக்கவுள்ளன. இதற்கான முதல் காலக்கெடு வரும் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, 2027 மார்ச்சில் உத்திசார் பேச்சுவார்த்தையும், 2028 டிசம்பரில் முக்கிய நாடுகளுடன் இறுதிப் பேச்சுவார்த்தையும் நடைபெறும்.

இறுதியாக, 2029 மத்தியில் நடைபெறும் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு மூலமாகப் போட்டியை நடத்தும் நகரம் தேர்ந்தெடுக்கப்படும்.

காமன்வெல்த்

இந்தியாவின் ஆயத்தப் பணிகள்

ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக இந்தியா கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் குஜராத் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தலைமையிலான உயர்மட்டக் குழு சுவிட்சர்லாந்தின் லோசானில் உள்ள ஐஓசி தலைமையகத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது.

நிதி நிலைத்தன்மை, விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பு, வீரர்களுக்கான வசதிகள் மற்றும் மக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஐஓசி தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி தெரிவித்துள்ளார்.

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ள சூழலில், 2036 ஒலிம்பிக் போட்டிக்கான இந்த ஆரம்பக்கட்ட நகர்வு இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT