சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி : மார்ச் 13 முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து, நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்கியுள்ளது. இது முடிந்து மார்ச் 17 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி
இதில் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைனில் வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் புக் மை ஷோமற்றும் பேடிஎம்மில் புக் செய்து கொள்ளலாம். மேலும், ஆஃப்லைன் டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் விற்கப்பட உள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகள் விலை ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை விற்கப்படும் நிலையில், ஆஃப்லைனில் ரூ.1,200க்கு டிக்கெட் விற்கப்பட உள்ளது. நீண்ட காலம் கழித்து சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.