ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா
சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 பந்தில் டக் அவுட்டானார். 11வது ஓவரில் ஆஸ்திரேலியா 68/1 என்ற நிலையில் இருந்த போது கிரீஸில் வந்த ஸ்மித், 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை ஹர்திக் பாண்டியா அவுட்டாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்பஸ்ஸின் கூற்றுப்படி, அடில் ரஷித் ஸ்மித்தை ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 6 முறை அவுட்டாக்கி உள்ளார். அதற்கடுத்த இடத்தில் பாண்டியா தற்போது உள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்தை அதிகமுறை அவுட் ஆக்கியவர்கள்
ஸ்மித்தை அதிகமுறை அவுட்டாக்கியவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே அடில் ரஷீத் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ள நிலையில், மொயீன் அலி, டிரென்ட் போல்ட், ஸ்டூவர்ட் பிராட், முகமது ஷமி, மார்க் வுட், உமேஷ் யாதவ் போன்றோர் ஸ்மித்தை 3 முறை அவுட்டாக்கி அடுத்த இடத்தில் உள்ளனர். தற்போதைய இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் ஸ்மித் பேட்டிங் செய்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாண்டியாவிதமே வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மூன்றாவது போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் ஸ்மித் 6வது முறையாக ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார். ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகும் வகையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களான டீன் ஜோன்ஸ் மற்றும் டேவிட் பூன் (6) ஆகியோரின் எண்ணிக்கையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.